பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன “நிறுவனர்” நாள் விழா

நிகழ்வு நாள் : 15.09.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் நாளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நிறுவனர் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112ஆவது பிறந்த நாளான 15.09.2020 அன்று காலை நிறுவன வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் சமூக இடைவெளியுடன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேரறிஞர் அண்ணா தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் இளந்தமிழர் இலக்கியப் பேரவை தமிழ்நாடு இணைந்து 112 தமிழறிஞர்கள் பங்கேற்ற மாபெரும் பன்னாட்டுக் கருத்தரங்கம் இணையவழியாக தொடர்ந்து 12 மணி நேரம் நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன (பொ.) இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றினார் அவர் தம் உரையில் “உலகத்தில் உயர் தமிழ் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு ஓர் இடம் இல்லையே! எனக் கருதி தரமணியில் நிலம் தந்து, அதற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற பெயரும் தந்தவர் பேரறிஞர் அண்ணா. அவர் கட்டமைத்த காரணத்தினால்தான் இன்றைக்கும் தரமான உயர் தமிழ் ஆய்வு பணி தரணியிலே நடைபெற்று வருகிறது. அதன் வழியாக சுமார் 10 உலகத் தமிழ் மாநாடுகள் இதுவரை நடந்து இருக்கிறது. அறிவு, மதிநுட்பம் பேச்சு, அரசியல் ஆளுமை இவையெல்லாம் இந்த உலகுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பேரறிஞர் அண்ணா காட்டிய வழி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் செப்பனிட்ட வழியை வீறுநடை போட்டு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூபாய் 10 இலட்சம் வைப்புத் தொகையுடன் பேரறிஞர் அண்ணாவின் பெரும் புகழைப் போற்றும் விதமாக “பேரறிஞர் அண்ணா தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை” என்கிற அறக்கட்டளை ஏற்படுத்தி அதன்வழி பன்னாட்டு தேசியக் கருத்தரங்குகள் நடத்தி, அண்ணாவைப் பற்றி ஆய்வு செய்கிற மாணவர்களுக்கு ஆய்வு உதவித் தொகை வழங்கவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் அதுதான் அண்ணாவுக்கு இன்றைய தினத்தில் நாம் செய்கின்ற நினைவேந்தல் என புகழ் மாலை சூட்டினார்.
மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க.பாண்டியராசன் அவர்களின் சிறப்புரையில் “112 அறிஞர்கள் அண்ணாவின் புகழை அவரவர் கோணங்களில் போற்றவிருக்கும் இந்த நிகழ்வை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பேரறிஞர் பெருந்தகை அண்ணா முதல் 12 ஆண்டுகளில் இருந்து அதன் பின்னர் 1962 லிருந்து 1968 வரையிலான பயணம், சீனா போரின் போது இந்திய ஒருமைப்பாட்டினை நிலைநாட்டும் அசைக்கமுடியாத கொள்கைகளை கொண்டவராக இருந்தார். அதேபோல் அவர் எடுத்து வைத்த முதல் கொள்கை தமிழகத்தை சார்ந்தே இருந்தது. ஆனால் கடைசி ஆறு ஆண்டுகளில் அவர் பார்வை "பாரதம் - பாரதத்தில் தமிழகத்தின் பங்கு" என்பது மேலோங்கியிருந்தது. 1967 இல் அவர் முதலமைச்சராக இருந்தபோது “ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி இலட்சியம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி நிச்சயம்” என்று சொல்லி ஒரு கொள்கை விளக்கமாக கொண்டு சென்று இன்றைக்கு இலவச அரிசி என்ற direct transfer of profit மற்றும் welfare state model போன்ற கொள்கைகளைக் கொண்டு, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் முன்னோடியாக திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளைக் கொண்டு செல்லக் கூடிய, இதை போல் ஒரு பொருளாதார வடிவத்திற்கு வித்திட்டவர் அண்ணா என்றால் மிகையாகாது” என புகழாராம் சூட்டினார்.
மேலும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர், செவாலியர் டாக்டர் வி.ஜி.சாந்தோசம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர்தம் உரையில் “பேரறிஞர் அண்ணா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்கிற பெருமிதத்தோடு அண்ணாவைப் பற்றிய சில நினைவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் ஒரு சமூக புரட்சியாளர், எல்லோரும் ஒன்றாக மனமகிழ்வோடு இருக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்ட சிற்பி, தமிழ் மூலமும் பேச்சுத்திறன் மூலமும் இளைஞர்களை திராவிட சித்தாந்தத்தில் மடை மாற்றம் செய்து, மொழியை ஆயுதமாகக் கொண்டு ஆட்சி பிடித்த பெருமகனார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொன்னதோடு நிற்காமல், ஏழை மகன் வந்தால் தான் இந்த சமூகம் உயர்ந்து நிற்கும் என்கிற பெரியாரின் கொள்கையை வாழ்நாளின் கடைசி நாள் வரை சுமந்து கொண்டிருந்தவர். “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற மூன்று படங்களில் இளைஞர்களை கட்டிப்போட்டு திராவிட முழக்கங்களை மக்கள் மனதில் கொண்டு சேர்த்தவர். நான் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தேன். அவர் இறப்பில் அவ்வளவு கூட்டம், வந்தவர்கள் எல்லாம் அவர் தம்பிகள் அவருக்காக உயிரை விடவும் தயாராக இருந்த தம்பிகள். அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே எனது பெரும் பேறு” என்று அகமகிழ்வோடு நினைவு கூர்ந்தார்.
112 தமிழறிஞர்கள் பங்கேற்ற இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் பிரான்சு, பிரித்தானியா, ஹாங்காங், மலேசியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் அறிஞர்கள் பங்கேற்று அண்ணாவின் புகழை ஓங்கி ஒலித்தனர்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன், மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், மொழிப்பெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் முன்னிலையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர்கள் முனைவர் கு.சிதம்பரம், முனைவர் து.ஜானகி, வேல்ஸ் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர்கள் முனைவர் கி.துர்காதேவி முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன் ஆகியோர் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை இளந்தமிழர் இலக்கியப் பேரவையின் நிறுவனர் சட்டம் மு.முனீசுவரன் அவர்கள் தொகுத்து வழங்கி நன்றியுரை ஆற்றினார்.
இதனிடையே, மாலை 5 மணிக்கு வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ டாக்டர் கோ.விசுவநாதன் அவர்கள் “அண்ணா ஒரு பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். இவர் தம் உரையில் “அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த நான், அண்ணா மாத்திரம் இல்லாது இருந்திருந்தால் இந்தியாவின் ஏதோவொரு மூலையில் வழக்கறிஞராக என் வாழ்வை முடித்து இருப்பேன். ஆனால் இன்று தேசம் முழுதும் போற்றிப் புகழ்பெற தலைவர்களையெல்லாம் சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு பேரறிஞர் அண்ணாதான் காரணம். 39 ஆண்டுகள் அரசியல் களத்தில் கணக்கிலடங்கா சாதனைகளை படைத்தவர் அண்ணா. அண்ணாவின் அரசியல் நாகரீகம் இந்த சமூகத்தில் மீண்டும் ஒரு தலைவன் அப்படி உருவாக வேண்டும் என்கிற அளவுக்கு நமக்குள் என்னத்தை விதைக்கும. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டு காலம் ஆட்சியில் இருப்போம் என்று சொன்னார். இன்றும் நம்மிடையே அண்ணா நீங்காது நிலைத்து நிற்கிறார். ஒரு காலத்தில் தமிழ் புலவர்களுக்கு பண்டிதர்களுக்கு மட்டும் தெரிந்த மொழியாக இலக்கண நெளிவு சுளிவுகளுடன் இருந்தபோது, அதை பாமர மக்களும் பார்த்து படித்து ரசிக்கும் அளவுக்கு மாற்றித் தந்தவர். தமிழை தன் எழுத்தாலும் பேச்சாலும் கொண்டு போய் சேர்த்த பெருமகனார் பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையாகாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அரசியல் நாகரிகம் போன்றவற்றில் தனக்கென தனிக் கொள்கையை படைத்து திராவிடம் இருக்கும்வரை அண்ணாவை பின்பற்றுகிற பெரும் கூட்டம் இருக்கும் என்கிற அளவுக்கு அண்ணாவின் புகழை போற்றும் கொள்கைகளை உருவாக்கி தந்தவர் அண்ணா. இந்த நன்னாளில் அண்ணாவின் பெரும் புகழை போற்றுகிற பலதரப்பட்ட தொடர் நிகழ்வுகளை அண்ணா கண்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனம் முன்னெடுத்து இருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாராட்டுரை வழங்கினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனித் தமிழ்ச்சங்கம் மற்றும் சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து அண்ணா அவர்களின் புகழைப் போற்றும் வகையில் சமூக ஆர்வலர் மருத்துவர் நா.எழிலன் அவர்கள் “நவீன தமிழகத்தின் சிற்பி அண்ணா” என்ற தலைப்பில் இணையவழிச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். திருச்சி, சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தலைமையுரையும் தேனித் தமிழ்ச் சங்கத் தலைவர் தேனி மு.சுப்பிரமணி முன்னிலையுரையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா வரவேற்புரையும் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு.அப்துல்காதர் நன்றியும் நவின்றார்.
தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்வளர்ச்சித் துறை கடலூர் மாவட்டமும் இணைந்து நடத்திய இணையவழி சிறப்புக் கருத்தரங்கில் மேனாள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை, பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, கலைப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் அவர்கள் “பாசத் தம்பிகளின் பாசறைத் தலைவன்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். திருவள்ளூர் மாவட்ட தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி சீ.சந்தானலட்சுமி அவர்கள் வரவேற்புரையும் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஜானகி. இராஜா, கடலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா.அன்பரசி ஆகியோர் ஒருங்கிணைப்பில், திருமதி சு.ஜெயலட்சுமி அவர்கள் நன்றி நவின்றார்.
மாலை 7.00 மணி நிகழ்வாக “அண்ணாவின் பன்முகங்கள்” என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் இணையவழி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன (பொ.) இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் வரவேற்புரையுடன் கருத்தரங்கம் தொடங்கியது. மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க.பாண்டியராசன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
தமிழ் வளர்ச்சித் துறை (ம) உலகத் தமிழ்ச் சங்கம் மேனாள் இயக்குநர், முனைவர் கா.மு.சேகர் “அண்ணா ஒரு விடிவெள்ளி” என்ற தலைப்பிலும் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ப.சிவராஜி “அண்ணா ஒரு கலங்கரை விளக்கம்” என்ற தலைப்பிலும் திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர், கவிஞர் பே.இராஜேந்திரன் “அண்ணா ஓர் அறிவாயுதம்” என்ற தலைப்பிலும் இளந்தமிழர் இலக்கியப் பேரவை தமிழ்நாடு நிறுவனர், சட்டம் மு.முனீசுவரன் “அண்ணாவும் இலக்கியமும்” என்ற தலைப்பிலும் மலேசிய எழுத்தாளர்கள் சங்கம், திரு. பெ.ராஜேந்திரன் “மலேசியாவில் அண்ணா” என்ற தலைப்பிலும் தென்காசி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் முனைவர் கேப்டன் பா.வேலம்மாள் “அண்ணாவின் சமுதாயப் பார்வை” என்ற தலைப்பிலும் வட அமெரிக்கா திருமதி ஜெயா மாறன் “அண்ணா காட்டிய இலக்கிய நெறி” என்ற தலைப்பிலும் இலங்கை மொழிகள் திணைக்களம், சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மொழிகள் பீடம், விரிவுரையாளர், செல்வி நாகரத்னம் சுதர்ஷினி “அண்ணாவின் நாடகங்கள்” என்ற தலைப்பிலும் ஆஸ்திரேலிய தமிழ் அகாதெமி திரு. நாகை கா.சுகுமாரன் ஆஸ்திரேலிய தமிழ் அகாதெமி திரு. நாகை கா.சுகுமாரன் “அண்ணா காட்டிய வாழ்க்கை நெறி” என்ற தலைப்பிலும் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, கலைப்புல முதன்மையர், முனைவர் சௌந்தர மகாதேவன் “அண்ணாவின் தெள்ளு தமிழ் நடை” என்ற தலைப்பிலும் சிங்கப்பூர் திரு. சேகர் முனியாண்டி “அண்ணா கடிதங்களில் அயலக வரலாறு” என்ற தலைப்பிலும் ஐக்கிய அரபு அமீரகம், துபாய், தமிழ் ஆராய்ச்சி ஆய்வாளர், முனைவர் ஸ்ரீ ரோகினி “அண்ணா கண்ட தமிழகம்” என்ற தலைப்பிலும் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை மாணவர் திரு. பழ.பாஸ்கர் “அண்ணா என்னும் அமுதசுரபி” என்ற தலைப்பிலும் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை மாணவர் திரு. கோ.மணி “அண்ணா எனும் பேராளுமை” என்ற தலைப்பிலும் கட்டுரை வாசித்தனர். இறுதியாக மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன் அவர்கள் நன்றி நவின்றார்.
இவ்வாறாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112ஆம் பிறந்தநாள் விழா மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் நாள் விழா தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக நடத்தியது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.

படச்செய்தி
15.09.2020 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணையவழி நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 112ஆவது பிறந்தநாள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன “நிறுவனர் நாள்” விழாவில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க.பாண்டியராசன், மேனாள் அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ டாக்டர் கோ.விசுவநாதன், செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்.