மேம்படுத்தப்பட்ட திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம்

நிகழ்வு நாள் : 07.11.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
மேம்படுத்தப்பட்ட திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம்
மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராசன் அவர்களால்
திறந்து வைக்கப்பட்டது.
2013-2014 சட்டமன்ற அறிவிப்புகளில் ரூ 10.00 இலட்சம் மதிப்பீட்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க (அரசாணை நிலை எண். 174, த.வ.ம.செ (தவ2-2) துறை, நாள் 12.7.2013) மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக 23.12.2013 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இது இனம், மொழி, சமயம் கடந்த உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலக மக்கள் அனைவரும் படித்தும், திருக்குறள் கருத்துக்களைக் காட்சிவழியில் பெற்றும் நல்வாழ்வு பெறுவதை நோக்கமாகக் கொண்டு திருக்குறள் சிறப்புகளை விளக்கும் வகையில் இக்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை நடத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் 2019-2020 சட்டமன்றப் பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தின் வழியே ஆண்டுதோறும் திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க ரூபாய் 10 இலட்சம் வழங்கி ஆணையிட்டார்கள்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் வெளிவரும் தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளில் போட்டி தொடர்பான செய்தி வெளியிடப்பட்டு, 89 ஓவியங்கள் பெறப்பட்டன. அவற்றில் சிறந்த படைப்புகளாக 15 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்களால் 24.02.2020 அன்று நிறுவனத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் படைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 40,000/-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஓவியங்களுக்கும் தேக்குமரச் சட்டங்கள் பொருத்தும் பணி மற்றும் சிறப்பு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் முடிக்கப்பட்டு இன்று (07.11.2020) மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராசன் அவர்களால் மேம்படுத்தப்பட்ட திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொ) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், அம்மா தமிழ்ப்பீடம் நிறுவனர் திரு. ஆவடிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.