திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளை (ம) சீர்காழி நாகலிங்கம் மரகதம் நினைவு அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 10.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பத்தாவது நாளாக (10.02.2021) முற்பகல் திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பரமக்குடி அரசுக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் வே.ஜெயராணி அவர்கள் ‘சங்க இலக்கியத்தில் சைவ சமயத் தாக்கம்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்களில் சைவ சமயம் கருத்துக்கள் அது தொடர்பான இறை வழிபாடுகள், இறை வழிபாட்டின் வழி அடையக்கூடிய வீடுபேறுகள் போன்றவை பற்றியும் தேவர், நரகர், இந்திரன் யமன் போன்ற கடவுள்கள் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து தமிழ்ச்செம்மல் முனைவர் இரத்தின நடராசன் அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ம.எஸ்தர் ஜெகதீசுவரி அவர்கள் ‘கம்பனில் மனித நேயம்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இவர் பேசுகையில் கம்ப இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரப்படைப்புகள் அனைத்தும் ஆளுமை மிக்க பாத்திரங்களாக மிக இரத்தின சுருக்கமாக கம்பர் சித்தரித்துள்ள விதத்தை மிக செறிவாக எடுத்துக் கூறினார். கம்பரின் தேர்ந்தெடுத்த சொற்கள், பாத்திரப்படைப்பு அனைத்தும் மனித நேயத்தை விளக்கும் விதம் கண்டேன் கற்பினுக் கனியை, குகனோடு ஐவர் ஆனோம் போன்ற ஒவ்வொரு பாத்திரங்களையும் சொற் சித்திரமாக படைத்துள்ள திறத்தை எடுத்துக் கூறினார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் து.ஜானகி அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.
(10.02.2021) பிற்பகல் சீர்காழி நாகலிங்கம் மரகதம் நினைவு அறக்கட்டளை திரு.நாக.லட்சுமிநாராயணன் அவர்களின் வேண்டுகோலுக்கிணங்க ஆசுர் க.தங்கதாசன் அவர்களின் சீர்பிரித்த குறள், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் உரையும், அயலகத் தமிழறிஞர் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில உரையுடன் கூடிய “திருக்குறள் மூலமும் உறையும்” என்னும் தலைப்பிலான நூலை நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்று வெளியிட நிறுவனக் கண்காணிப்பாளர் திரு.ஸ்.கோபிநாத் அவர்கள் பெற்றுக்கொண்டார். தமிழ்ச்செம்மல் முனைவர் இரத்தின நடராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .