பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளை (ம) தமிழ் இயற்கை மருத்துவ ஆய்விருக்கை

நிகழ்வு நாள் : 18.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதினெட்டாவது நாளான இன்று (18.02.2021) முற்பகல் பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தெள்ளாறு, இராஜா நந்திவர்மன் கலை (ம) அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.ஏழுமலை அவர்கள் ‘சமணக்கோட்பாடுகளும் சமூக நெகிழ்வுகளும்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் தமிழகத்தில் சங்க காலத்தை ஒள்றி வளர்ந்த சமயம் சமணமாகும். தமிழ் இன்றைக்கு உயர்ந்த நிலையில் பெருமை கொள்வதற்குச் சமணமும், சமண சமயத்தைச் சார்ந்த துறவிகளும் கூட ஒரு காரணமாவார்கள் என்று விளக்கிக் கூறினார். இதனைத் தொடர்ந்து பெரியார் ஈ.வெ.ரா.நாகம்மை அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சாத்தூர், மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திருமதி மு.சித்ராதேவி அவர்கள் ‘சுற்றுச்சூழல் நோக்கில் அகநானூறு’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் ஐந்தினைப் பாகுபாடுகளை இலக்கண வழி எடுத்துக்கூறி சங்க மாந்தர்கள் ஐந்திணைகளிலும் சுற்றுச் சூழலோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த செம்மாந்த வாழ்வைச் சூழலியல் சிந்தனையுடனும், உயிரினம், பயிரினம் என இயற்கையைப் பாகுபாடு செய்து அவற்றால் விளையும் பயன்களும், சங்ககால மனிதன் தன் தேவைக்காக இயற்கையைப் பயன்படுத்தியுள்ள விதத்தினையும், இயற்கையோடு இணைந்து வாழ்வு நடத்திய முறையை பற்றியும் கருப்பொருட்கள் அடிப்படையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறினார். சொற்பொழிகளுக்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் கா.காமராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், முனைவர் நா.சுலோசனா அவர்களும் முன்னிலை வகித்தனர். நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.
படச் செய்தி: நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன், தமிழ் இயற்கை மருத்துவ ஆய்விருக்கை பொறுப்பாளர் மருத்துவர் க.ஆ.ரவி, நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், பொழிவாளர்கள் முனைவர் இரா.ஏழுமலை, திருமதி மு.சித்ராதேவி, நிறுவன இணைப்பேராசிரியர் ஆ.மணவழகன், நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கா.காமராஜ், முனைவர் நா.சுலோசனா
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதினெட்டாவது நாளான இன்று (18.02.2021) பிற்பகல் தமிழ் இயற்கை மருத்துவ ஆய்விருக்கை சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மருத்துவர் அ.இராசலிங்கம் அவர்கள் ‘தமிழ் (இயற்கை) மருத்துவத்தில் வர்மம்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இருக்கையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுசான்லி மருத்துவர் க.ஆ.இரவி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.