“பொருட்பாலில் திருவள்ளுவரின் பன்முகத் தன்மை” திருக்குறள் தேசியக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 09.04.2021

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் “தலைவர் சொ.க.கோவிந்தசாமி - கோ.சின்னம்மாள் திருக்குறள் தேசியக் கருத்தரங்க அறக்கட்டளை சார்பில்” திருக்குறள் தேசியக் கருத்தரங்கம் இன்று (09.04.2021) நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்களின் தலைமையுரையுடன் தொடங்கியது. அவர்தம் உரையில் உலகளாவிய தமிழ்ப்பண்பாட்டுக்கு ஆவணமாகத் திருக்குறளைத் திருவள்ளுவப் பெருந்தகை இயற்றினார். திருக்குறளின் பொருட்பாலில் உள்ள சிந்தனைகளும் கருத்துகளும் அரசின் ஆட்சி அதிகாரத்துக்கு வழிகாட்டுவனவாக உள்ளன. எல்லா நாட்டு மக்களும் பின்பற்றத் தகுந்த சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்ட திருக்குறள் தமிழர்களால் மட்டுமின்றி உலக மக்களாலும் போற்றப்படுகிறது என்றார். மேலும், பொருட்பாலில் வள்ளுவர் வழங்கியுள்ள சிந்தனைகள் ஆய்வுசெய்யப்பட வேண்டியதன் தேவையை உணர்ந்து, தலைவர் சொ.க.கோவிந்தசாமி - கோ.சின்னம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் இந்த தேசியக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது எனக் கூறினார். நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார், நிறுவன திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடப் பொறுப்பாளரும் அயல்நாட்டுத் தமிழர் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் து.ஜானகி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் “பொருட்பாலில் திருவள்ளுவரின் பன்முகத் தன்மை” கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். அவர்தம் வாழ்த்துரையில் நல் உலகைப் படைத்திட திருக்குறள் கருத்துகளை உலகெங்கும் பரப்பிட வகைசெய்தல் வேண்டும் என்பதற்காகவே, நூற்றுக்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகளை உலகெங்கும் நிறுவியுள்ளேன் எனக் கூறினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் திருக்குறளின் கொள்கைகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருவதற்கு வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழ்த்தாய் மகிழ்ச்சியுடன் உலாவிடும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேன்மேலும் சிறந்திட வாழ்த்துகள் என்றார். முனைவர் உலகநாயகி பழனி அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார். கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்த கட்டுரையாளர்களுக்கு செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார். நிறுவன முனைவர்பட்ட ஆய்வாளர் த.ஜான்சி பிரியா அவர்கள் நன்றி நவின்றார்.

படச்செய்தி 1: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் “பொருட்பாலில் திருவள்ளுவரின் பன்முகத் தன்மை” திருக்குறள் தேசியக் கருத்தரங்கங்கின் கட்டுரைத் தொகுப்பு நூலினை வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் வெளியிட முனைவர் உலகநாயகி பழனி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் த.ஜான்சி பிரியா, நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி, நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் மற்றும் புலவர் வெற்றியழகன்.
படச்செய்தி 2: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் “பொருட்பாலில் திருவள்ளுவரின் பன்முகத் தன்மை” திருக்குறள் தேசியக் கருத்தரங்கங்கில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்த கட்டுரையாளர்களுக்கு செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். உடன் முனைவர் உலகநாயகி பழனி, நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி, விசய சக்திசேதுபதி, நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், புலவர் வெற்றியழகன் மற்றும் த.ஜான்சி பிரியா.