உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகத் தினம்

நிகழ்வு நாள் : 23.04.2021

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகர்களையும் ஒன்றிணைத்து அவர்களின் நூலகச் சேவைகளை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்வுகளை Tamilnadu Librarians youtube Channel வழியாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் பிற சிறப்பு நாட்களில் இணையதள நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 40வது நிகழ்ச்சியாக உலகப் புத்தகத் தினம் மற்றும் நூலகத் தினம் சிறப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை நந்தனம், அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியின் நூலகரும், தமிழ்நாடு நூலகர்கள் அமைப்பின் நிறுவனத் தலைவருமான முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள் தனது வரவேற்புரையில், தமிழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி நூலகர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நல் நூலகர் விருதுகள் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகத் தினம் குறித்த நோக்கவுரை ஆற்றினார், அந் நிறுவனத்தின் நூலகர் முனைவர். பி. கவிதா அவர்கள். வாழ்த்துரை ஆற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர். கோ.விசயராகவன் அவர்கள், முனைவர். இரா. கோதண்டராமன் அவர்களின் கோரிக்கையை அரசிற்கு பரிந்துரை செய்து அனுப்புவேன் என உறுதியளித்தார். நிகழ்ச்சியில் கற்றனைத்தூறும் அறிவு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய எழுத்தாளரும், பதிப்பாளருமான திரு. கோ.ஒளிவண்ணன், புத்தகத்தை படிப்பதால் நமக்கு கிடைக்கும் சிறப்புக்களை மிக அழகாகவும் தெளிவாகவும் விளக்கினார். இணையதள நேரலை நிகழ்ச்சியில் நூலகர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இறுதியாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை, கன்யகா பரமேஸ்வரி கல்லூரியின் நூலகருமான முனைவர் கே.மாலதி அவர்கள் நன்றி நவில, விழா இனிதே நிறைவடைந்தது.