'புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்’ - தேசியக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 18.12.2019

ஒவ்வொரு இனத்திற்கும் தனித்த விழுமியங்கள் உண்டு
- பேராசிரியர் ஆறு.இராமநாதன் பேச்சு

தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலமும், தமிழியல் ஆய்வு நடுவமும் இணைந்து நடத்திய ’புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்’ என்ற தேசியக் கருத்தரங்கம் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் நோக்கவுரை வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் நாட்டுப்புறவியல் தலைவர் முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களை வெளியிட்டு தொடக்கவுரை ஆற்றினார். கருத்தரங்க நிறைவுவிழாவில் கவிஞர் ஆண்டார் பிரியதர்சினி அவர்கள் நிறைவுரை ஆற்றி ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார்.

நோக்கவுரை வழங்கிய முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், உலகின் மிகப் பழமையான இனக்குழுக்கள், தம்மைச் செழுமை படுத்திக்கொள்ள காலந்தோறும் பலவிதக் கற்பிதங்களை உருவாக்கியுள்ளன. அவை நெறிப்படுத்துதல், தற்காத்துக்கொள்ளுதல், தக்கவைத்துக் கொள்ளுதல், தனித்துக்காட்டல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டவை. சமகால தேவையின் அடிப்படையில் உருவாக்கப்படும் இவ்விதக் கற்பிதங்கள் கால ஓட்டத்தில் எதிர்நிலை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால், யுகங்கள் பல கடந்தும் மனித வாழ்வியலைச் செழுமைபடுத்தும் சிந்தனைகள் விழுமியங்களாக எஞ்சி நிற்கின்றன. காலத்திற்கும், பட்டறிவிற்கும் ஏற்ப இவை கோட்பாடுகளாகவும், வரையறைகளாகவும் உருவம்பெறுகின்றன. சுருங்கக் கூறின், ஒரு பண்பட்ட, தொன்மையான இனக்குழு எவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று போராடுகிறதோ, எவற்றை இழந்துவிட்டதாக வருந்துகிறதோ அவ்வகை நடத்தைகள் அல்லது கற்பிதங்களே விழுமியங்களாகின்றன.

பொதுவாக விழுமியங்கள் குறித்த நம் தேடல்களும் மரபு இலக்கியங்களைக் களமாகக் கொண்டே அமைகின்றன. தமிழ்ச் சமூக விழுமியங்களைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பதிவுசெய்துள்ளன. விருந்தோம்பல், கொடை, வீரம், மானம், வடக்கிருத்தல், ஈகை, அன்பு, உயிரிரக்கம், அறநெறி போன்ற உயர் பண்பு நெறிகளைச் சுட்டும் இலக்கியங்களாக அவை இருக்கின்றன. ஆயினும், ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதின இலக்கியங்களிலும், ஒரு நூற்றாண்டு கால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதுக்கவிதை, சிறுகதை இலக்கிய வடிவங்களிலும் கண்டறியமுடியும் என்கிற கருதுகோள்களை முன்வைத்தே இக்கருத்தரங்கம் நிகழ்த்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தொடக்கவுரையாற்றிய முனைவர் ஆறு. இராமநாதன் அவர்கள் தமது உரையில், உலகில் மனித இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளன. அனைத்திற்கும் பொதுவாக விழுமியங்கள் என்ற ஒன்றை நாம் வரையறுப்பது கடினம். ஒரு இனக்குழுவில் கொண்டாடப்படும் ஒரு பண்பு அல்லது நெறி பிற இனக்குழுவிற்குப் பொருந்தாமல் போகலாம். ஆநிரை கவர்தலைச் சங்கச் சமூகம் விழுமியமாகக் கொண்டாடியது. தற்போது இல்லையென்றாலும் அண்மைக்காலம் வரியிலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆநிரை திருட்டு என்பது சில இனக்குழுக்களின் வழக்கத்தில் இருந்தது. அச்செயலை அக்குழுக்கள் வழுவாகக் கருதவில்லை. அப்படி பார்க்கிறபோது தமிழ்ச் சமூகத்திற்கென ஒட்டமொத்த விழுமியங்கள் எவை என்ற கேள்வியும், தமிழ்ச் சமூகத்திற்கே உரிய சிறப்புக் கூறுகள் எவை என்ற கேள்வியும் எழுகின்றன. இவற்றை நாம் புத்திலக்கியப் படைப்புகளில்தான் தேடியாக வேண்டும். அந்த வகையில் இந்த கருத்தரங்கு மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

நிறைவுரையாற்றிய கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி அவர்கள், மக்களின் வாழ்வியலைப் உள்ளபடி பதிவு செய்யும் இலக்கியங்களாக இன்றைய நவீன இலக்கியங்கள் உள்ளன. தமிழ்ச் சமூகத்தின் உண்மையான முகத்தை இங்குதான் நாம் காணமுடியும். மேலும், தமிழ்நாட்டிலிருந்து வரும் படைப்புகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது, வேலை நிமித்தல் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் சூழலை நம் சூழலோடு ஒப்பிட்டு எழுதும் படைப்புகளையும் நாம் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள். புதின இலக்கியம், சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம் என்று மூன்று பிரிவுகளில் ஏழு அமர்வுகளாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்பட்டது. கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு நூற்தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

படச்செய்தி : கருத்தரங்க ஆய்வுக் கோவையை முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் வெளியிட முனைவர் கோ.விசயராகவன் முனைவர் ஆ.மணவழகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன், இடமிருந்து முனைவர் கிருங்கை சேதுபதி, முனைவர் காமராசு, முனைவர் அன்பு சிவா, முனைவர் முருகன், திரு ஆறுமுகம் ஆகியோர்.