கலைத்தமிழ் ஆய்வுக் களங்கள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 23.12.2019

தமிழ்நாடு அரசு நிதி நல்கையுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல் கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் சார்பில் ‘கலைத் தமிழ் ஆய்வுக் களங்கள்’ என்ற பொருண்மையில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 23.12.2019 காலை 10 மணிக்கு இனிதே தொடங்கியது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையுரை ஆற்றினார். சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சீதாலட்சுமி தொடக்கவுரை ஆற்றினார். நிறுவனப் பேராசிரியர்கள் முனைவர் ஆ.மணவழகன், முனைவர் கா.காமராஜ் ஆகியோர் முன்னிலையுரை ஆற்றினர். சமூகவியல் கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் தலைவரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் பா.இராசா கருத்தரங்க நோக்கம் குறித்து விரிவான உரை நிகழ்த்தினார். கலைகள் தொடர்பாக இதுவரை வந்துள்ள ஆய்வுகள் எவை, இனித் தொடர்ந்து செய்ய வேண்டியன எவை என்பன குறித்து இக்கருத்தரங்கப் பொருண்மை அமைந்திருப்பதாகக் கூறினார். மொரீசியசு மகாத்மாகாந்தி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் உமா அழகிரி வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்க ஆய்வு நூலினை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறை மேனாள் தலைவர் முனைவர் வ.ஜெயதேவன் வெளியிட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் பண்பாட்டு ஆய்விருக்கைப் பேராசிரியர் ம.செ. இரபிசிங் பெற்றுக்கொண்டார். பேராசிரியர் ஜெயதேவன் அவர்கள் தமது உரையில், தமிழில் நுண்ணாய்வுகள் பல வெளிவரவேண்டும். ஒப்பீட்டு ஆய்வுகள் பல வெளிவரவேண்டும். அதற்கு இளைய தலைமுறை ஆய்வாளர்கள் தகுந்த ஆய்வுத் தளங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக்கூறினார்.
கருத்தரங்கின் முதல் அமர்வு பேரா. ம.செ. இரபிசிங் தலைமையிலும் இரண்டாம் அமர்வு சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேரா. முனைவர் சீதாலட்சுமி தலைமையிலும் மூன்றாம் அமர்வு மொரீசியசு மகாத்மா காந்தி பல்கலைக்கழகப் பேரா. முனைவர் உமா அழகிரி தலைமையிலும் நடைபெற்றது. மூன்று அமர்வுகளிலும் பத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கட்டுரையின் ஆய்வுப் பொருண்மை குறித்த கருத்துகளை எடுத்துரைக்க, அவற்றின் தொடர்பான விவாதங்களும் நடைபெற்றன. இன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டுப் பேராளர்கள் இருவரும் அவர்கள் வாழும் நாட்டிலுள்ள கலை வடிவங்களின் சிறப்புகளையும் தமிழகத்திலுள்ளோர் வெளியிடும் நூல்களின் கருத்துகளில் சிலவற்றையேனும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் தமிழின் பெருமைகள் உலகெங்கிலும் சென்றடையும் என்பதனையும் எடுத்துரைத்தனர். இன்றைய நிகழ்வின் வரவேற்பினை முனைவர் பட்ட ஆய்வு மாணவி திருமதி சு. இலக்கியா வழங்க, நன்றியுரையை முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஜெ.துளசிராமன் வழங்கினார். வெளிநாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டதோடு நிறுவனப் பேராசிரியர்களும் முனைவர் பட்ட, ஆய்வியல் நிறைஞர்பட்ட, முதுகலைப் பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

படச்செய்தி
23.12.2019 அன்று நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல் கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் சார்பில் ‘கலைத்தமிழ் ஆய்வுக் களங்கள்’ என்ற பொருண்மையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்க நூல் வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சீதாலட்சுமி, பேராசிரியர் ம.செ. இரபிசிங், பேராசிரியர் ஜெயதேவன், முனைவர் ஆ.மணவழகன், முனைவர் கா.காமராஜ், சமூகவியல் கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் தலைவரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் பா.இராசா, மொரீசியசு மகாத்மாகாந்தி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் உமா அழகிரி மற்றும் திருமதி சு. இலக்கியா