தமிழ்நாடு நாள் விழா

நிகழ்வு நாள் : 07.11.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
தமிழ்நாடு நாள் விழாக் கொண்டாட்டம்

இந்தியாவின் அசைக்கமுடியாத அங்கம் தமிழ்நாடு
மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு (ம) தொல்லியல் துறை அமைச்சர் திரு.க பாண்டியராசன் தமிழ்நாடு நாள் விழாவில் பேச்சு

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் பெற்றபோது, தமிழ்மொழி பேசப்படும் எல்லைப் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, 01.11.1956 அன்று தனித்துவம் மிக்க தமிழ்நாடு கட்டமைக்கப்பட்டது. தனித்துவமிக்க தமிழ்நாடு மாநில உருவாக்கத்துக்காக நடைபெற்ற பல்வேறு அறப்போராட்டங்களில் முன்நின்று போராடிய சான்றோர் பெருமக்களை நினைந்து போற்றவும், அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய போராட்ட வரலாற்றை நினைவுகூரவும் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அரசுவிழாவாக, “தமிழ்நாடு நாள் விழா” சென்ற ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
2020-ஆம் ஆண்டுக்கான “தமிழ்நாடு நாள்விழா”, தமிழ்வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நவம்பர் 7 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. முற்பகல் 11.30க்குத் தொடங்கிய இவ்விழாவில், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் துரையரசத் தொண்டைமான் வரவேற்புரை நிகழ்த்தினார். அம்மா தமிழ்ப்பீடம் மற்றும் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ‘சொல்லின் செல்வர்’ ஆவடிக்குமார் தலைமையுரை ஆற்றினார். தமிழ்வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் தொடக்கவுரை நிகழ்த்தினார். தென் சென்னைத் தொகுதியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தென் சென்னைத் தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.அசோக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். அவரைத் தொடர்ந்து, மேனாள் அரசவைக் கவிஞரும் சட்ட மேலவை உறுப்பினருமான கவிஞர் முத்துலிங்கம் வாழ்த்துரையாற்றினார். தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராசன், சிறப்பாக ஆசிரியப் பணியாற்றிய பெருமக்களுக்கு, ‘நல்லாசிரியர் மாமணி விருது’ வழங்கித் தமிழ்நாடு நாள் விழாச் சிறப்புரையாற்றி, ‘தமிழ்நாடு நாள்’ கவிதை அரங்கேற்றத்தையும் தொடங்கிவைத்தார். அவர் பேசும்போது,
தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்வளர்ச்சித் துறையின் மூலமாக அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொண்டாடப்படும் “தமிழ்நாடு நாள்” விழாவில் நல்லாசிரியர் நன்மணி விருது பெற வருகைபுரிந்திருக்கும் தமிழாசிரியர்களுக்கு நல் வாழ்த்துகள். தமிழ், தமிழன் என்ற மொழி, இன உணர்வை வருங்காலத் தலைமுறையினரிடம் வழிநடத்தும் பேராற்றல் உங்களிடம் நிறைந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டும் வலிமை உங்கள் உள்ளத்தில் இருக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கு நல்லாசிரியர் நன்மணி விருதை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழுக்கான முதன்மை அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதற்கான ஆக்கப்பூர்வச் செயல்பாடுகளைத் தமிழ்நாடு அரசு முழுமுனைப்புடன் செய்து வருகிறது.
மொழியைப் பற்றிக் கொண்டு ஓர் இனம் எழும்போது தனி மாநில உருவாக்கம் சாத்தியமாகிறது. அத்தகைய கோட்பாட்டின் அடிப்படையில் தமிழினம் தனித்துவமிக்க தமிழ்நாட்டைக் கண்டு வெற்றி பெற்ற நன்னாள் 1.11.1956. தமிழ்நாடு தனி மாநில உருவாக்கத்தின் போது, எல்லைப் போராட்டத்தில் பங்கு கொண்ட எண்ணற்ற தியாகிகளின் இனமான உணர்வை நாம் மறவாமல் மதிக்க வேண்டும்.
ஓர் ஆசிரியர் மொழி உணர்வு கொண்டால் அதைப் பல்லாயிரம் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அதன் அடிப்படையில், இங்கு வந்திருக்கும் ஆசிரியப் பெருமக்களாகிய நீங்கள் இனமான உணர்வை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுதல் வேண்டும். மொழி உணர்வில் தமிழர்கள் மேம்பாடு கண்டால் பாரதத்தின் அசைக்க முடியாத அங்கமாகத் தமிழ்நாடு திகழும். பாரதப் பண்பாட்டிற்கு அடிப்படையே தமிழ்ப் பண்பாடு தான். தமிழை உலக அளவில் முதல் பத்து மொழிகளில் ஒன்றாகக் கொண்டு வருவதற்கு எல்லா முயற்சிகளையும் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. நிறுவன அடிப்படையில் தமிழை அடுத்த தலைமுறையிடம் கொண்டு வந்து சேர்த்ததில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் முக்கிய இடம் உண்டு. அந்த மரபில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடியார் அவர்களும் தமிழ்வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழ்ச்சங்கம் உள்ள நிறுவனங்கள் வாயிலாகத் தமிழ் வளர்ச்சிக்கு மிகச்சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்த்திறம் ஆய்வு நடுவத்தின் இயக்குநர் முனைவர் சி.முத்துமாலை நன்றியுரை ஆற்றினார். அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கத்தின் சென்னைப் பெருமாநகரச் செயலாளர் கவிச்சுடர் சிந்தைவாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.