டாக்டர் தெ.பொமீ அறக்கட்டளை, டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளை (ம) சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 12.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பன்னிரண்டாவது நாளான இன்று (12.02.2021) முற்பகல் டாக்டர் தெ.பொமீ அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றன. இதில் காட்டாங்குளத்தூர், எஸ்.ஆர்.எம். அறிவியல் (ம) தொழில் நுட்பக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.ஜெய்கணேஷ் அவர்கள் ‘‘தொடரடைவுகளும் சங்க இலக்கியச் சொல்லாய்வுகளும்’ என்னும் பொருண்மையில் பொழிவாற்றினார். தனது பொழிவில், சங்க இலக்கியத்தில் கூறப்பெற்றுள்ள புதுவிதமான சொற்களைப் பற்றியும் அச்சொற்கள் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்தும் விளக்கியதோடு ஆய்வுநோக்கின் அடிப்படையில் அச்சொற்களின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கிப்பேசினார். இதனைத் தொடர்ந்து டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றன. இதில் சாத்தூர், ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பி.ஸ்ரீதேவி அவர்கள் “பரிபாடலில் ஆன்மிகமும் உலகியலும் என்னும் பொருண்மையில் பொழிவாற்றினார். இப்பொழிவில் பரிபாடல் காட்டும் ஆன்மிகத்தையும் அதில் அடங்கியுள்ள இசைக்குறிப்புகளையும் பற்றி விளக்கவுரை ஆற்றினார். மக்களுக்குப் பரிபாடல் காட்டும் கருத்து என்ன என்பதையும் விளக்கிப்பேசினார். இந்நிகழ்வை அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்றார். நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றினார். நிறுவன முதுகலை மாணவர் பெ.பிரவின் அவர்கள் நிகழ்வின் இறுதியில் நன்றியுரை வழங்கினார்.

(12.02.2021) பிற்பகல் சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார். தஞ்சாவூர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் த.ஜெயக்குமார் அவர்கள் ‘எல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்’’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவர் பேசும்போது, “தந்தை பெரியாரின் கோட்பாடுகளால் தமிழகத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகள் மேலோங்கின. பகுத்தறிவை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் தோன்றி மக்கள் பணியாற்றத் தொடங்கின. சுயமரியாதை உணர்வு தமிழர்களிடம் விழித்தெழுந்தது. தமிழ்ச் சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை உடைத்துச் சமநிலைப்படுத்தும் சிந்தனைச் சிற்பியாகப் பெரியார் திகழ்ந்தார். பெரியாரது பங்களிப்புகள் சமூகத்தோடு மட்டும் நின்று விடாமல், தமிழ் மொழியோடும் தொடர்ந்தது என்றும், தமிழ்மொழி வரலாற்றில் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவராக மொழி ஆய்வாளர்களால் பெரிதும் குறிப்பிடப்படுபவர் மேலைநாட்டுத் தமிழறிஞர் வீரமாமுனிவர் ஆவார் எனவும் வீரமாமுனிவருக்குப் பிறகு, தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்படுத்திய பெருமகனார் பெரியார் ஒருவரே எனக் கூறினார். மேலும், மொழி, இன மேம்பாட்டுச் சிந்தனையாளரான பெரியாரைப் பெருமைப்படுத்தும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் விழா எடுத்து வருவதை பாராட்டினார். தமிழ்த்தாய் பெருவிழா பிப்ரவரித் திங்கள் முழுமையும் இவ்விழா நடைபெறுவது தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அமைகிறது எனவும் பெரியாரின் பிறப்பு, தமிழகத்தில் நிகழ்ந்திருக்காவிட்டால் மூடத்தனத்தின் முடைநாற்றம் தமிழகத்தை விட்டு அகன்று இருக்காது எனவும் சிந்திக்கும் சித்தாந்தத்தைத் தமிழர்களிடம் விதைத்த செம்மலாகப் பெரியாரை அடையாளம் காண்கிறோம் எனவும் குறிப்பிட்டார். பகுத்தறிவுக்குப் பாதை காட்டிய தந்தை பெரியாரின் வழியில் நடந்து, அப்பெருமகனாரை நினைவுகூர்ந்து போற்றவும் நல்லதொரு அறக்கட்டளைச் சொற்பொழிவில் பங்கேற்று உரையாற்றவும் வாய்ப்பளித்த இந்நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்” இந்நிகழ்வை அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் ஒருங்கிணைத்தார்.