அக்பர் கவுசர் யுனானி தமிழ் மருத்துவ அறக்கட்டளை (ம) வேத பாரதி மற்றும் ஔவையார் கல்வி அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 16.02.2021

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று அக்பர் கவுசர் யுனானி தமிழ் மருத்துவ அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது. நிகழ்வை அறக்கட்டளைப் பொறுப்பாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் ஒருங்கினைப்புச் செய்தார். நிகழ்விற்கு தமிழ்வளர்ச்சி, மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகன் தலைமையேற்றார். மணிமேகலை பதிப்பகத்தின் நிருவாக இயக்குநர் முனைவர் ரவி தமிழ்வாணன், பேராசிரியர் சிவராஜ், பேராசிரியர் செல்வக்குமார், பேராசிரியர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் யுனானி மருத்துவர் அக்பர் கவுசர் அவர்கள் எழுதிய ‘ஐந்நூறு யுனானி மூலிகைகளும் மருத்துவக் குணங்களும் (பா வடிவில்)’ என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலினை அமெரிக்காவைச் சார்ந்த மருத்துவர் ஜானகிராமன் வெளியிட, மருத்துவர் இளங்கோ பெற்றுக்கொண்டார். நிகழ்வில் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வு மாணவர்கள் பலரும் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய பேராசிரியர் மணவழகன் அவர்கள், உலகின் மிகத் தொன்மையான, தனித்துவமிக்க நாகரிகங்களாக 23 வகை நாகரிகங்கள் இருந்துள்ளது அறியப்படுகிறது. அவற்றில் இரண்டு நாகரிகங்கள் மட்டுமே இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. அவற்றுள் தமிழர் நாகரிகமும் ஒன்று. பழமையான ஒவ்வொரு நாகரிகமும் தனக்கென தனித்துவமான வாழ்வியல் கூறுகளோடு, மருத்துவ அறிவையும் கொண்டிருக்கின்றன. அதனால்தான் பழங்குடி இனங்களை மருத்துவத்தின் தொட்டில்கள் என்கின்றனர். அந்த வகையில் தொல்பழங்குடியான தமிழரின் மருத்துவ அறிவு வியக்கக்கூடியது.
தாவரங்களிலிருந்து மருந்துகளைப் பெருவதில்கூட அறத்தை வலியுறுத்திய சமூகம் சங்கச் சமூகம். அதனால்தான் ‘மரம்சா மருந்தும் கொள்ளார்’ என்கிறது நற்றிணை. ஐயவி புகைத்தல், வெண்சிறுகடுகு பூகையாட்டுல், வேம்பு, மரா மரங்களின் தழைகளை வீட்டில் செருகி வைத்தல், மகளிர் பிள்ளைப் பேற்றின்போது ஐயவி கொண்டு நறுமணப் புகையூட்டுதல், அறுவை சிகிச்சை மருத்தும், இசை மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவக் கூறுகளைக் பழந்தமிழ் இலக்கியங்களில் காணமுடியும். ஐயவி புகைத்தல் மற்றும் வெண்சிறுகடுகு புதைத்தல் மருத்துவத்தை இன்றும் மலைவாழ் பழங்குடிகளிடம் காண முடிகிறது. பிள்ளை பெற்றாள் செடி என்ற மூலிகையை அவர்கள் மகப்பேறு மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். தமிழினத்தைப் போலவே இசுலாமிய மக்களும் தங்களுக்கான தனித்துவமிக்க மருத்துவத்தை வளர்த்தெடுத்தனர். அது யுனானி மருத்துவமாக, இயற்கை மருத்துவமாக அறியப்படுகிறது. ஆனால் அதன் கூறுகள் அனைத்தும் உருது மொழியிலேயே உள்ளன. அதன் செயல்பாடுகளும் சிறப்புகளும் தமிழில் நூலாக வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதினாறாவது நாளான இன்று (16.02.2021) பிற்பகல் வேத பாரதி மற்றும் ஔவையார் கல்வி அறக்கட்டளை சார்பாகச் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மேனாள் தென்சென்னைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் முதுநிலை மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் திரு.வேளச்சேரி எம்.கே.அசோக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றினார். 73 மாணவர்கள் பங்கேற்று திருப்பாவை, திருவெம்பாவை தொடர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர். இதில் கலைமாமணி முனைவர் பால.இரமணி அவர்கள் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.