நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை (ம) சி.மா.துரையரசு அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 22.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இருபத்தோறாவது நாளான இன்று (22.02.2021) முற்பகல் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத் துறை தலைவர் பேராசிரியர் கோ. பழனி அவர்கள் ‘பம்மல் சம்பந்தனாரின் திரையுலக அனுபவங்களும் அணுகுமுறைகளும்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் சலனபடம், மௌன படம், பேசும் படம் என திரைப்படம் வளர்ச்சி பெற்ற நிலையையும் சலன படம் முதன் முதலில் 1872இல் எடுக்கப்பட்டது. இந்தியாவில் 1914இல் ‘கீசகம்’ என்ற சலன படம் தயாரிக்கப்பட்டது. தமிழில் முதலில் பேசும் படம் ‘குறத்திப்பாட்டும் நடனமும்’ என்பதாகும். இதன் பின்னரே முழுநீள படமாக காளிதாஸ் என்ற படம் தயாரிக்கப்பட்டது. பம்மல் சம்பந்த முதலியார் 1933இல் ‘சென்னை தமிழ் நாடக சங்கம்’ என்ற அமைப்பை தோற்றுவித்து அதன்வழி நாடக கலைஞர்களுக்கு நாடக பயிற்சி அளித்தார். நாடகத்தின்போது ஆர்மோனியம் பயன்படுத்துவது இடையூறாக உள்ளதால், அவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும், அவை தமிழ் இசை கருவி இல்லை என்றும் தென் இந்தியாவின் இசைகருவி மிருதங்கம் என்பதை கூறியவர் பம்மல் சம்பந்தர் என்பதை எடுத்துக் கூறி திரைப்பட வளர்ச்சிக்கு பம்பல் சம்பந்தனாரின் வழிகாட்டல்கள் முன்னோடியாக அமைந்தது என்பதை எடுத்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் சி.மா.துரையரசு அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சென்னை, து.கோ.வைணவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஜ.சிவக்குமார் அவர்கள் ‘தமிழ்ச் சமூக இயக்கங்களின் சங்க இலக்கிய வாசிப்பு’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், இந்திய தேசிய இயக்கம், தமிழ் தேசிய இயக்கம் சார்ந்து சங்க இலக்கியங்கள் வாசிக்கப்பட்ட முறைமையினை விளக்கினார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் அ.சதீஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார். நிறுவன முனைவர் பட்ட ஆய்வு மாணவி சு.கலைவாணி நன்றியுரை ஆற்றினார்.