தினமலர் மேனாள் ஆசிரியர், நாணயவியல் ஆய்வின் முன்னோடி முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவேந்தல் கூட்டம்

நிகழ்வு நாள் : 15.03.2021

தினமலர் நிறுவனர் டி.வி. இராம சுப்பையர் அறக்கட்டளை சார்பில் தினமலர் மேனாள் ஆசிரியர், நாணயவியல் ஆய்வின் முன்னோடி முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் இன்று (15.03.2021) சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மலரஞ்சலியுடன் நடைபெற்றது. நிகழ்வுக்கு தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தமிழ்த்தாத்தா உ.வே.சா. தேடித்தேடி சுவடிகளைப் பதிப்பித்ததைப் போல, ஆசிரியர் நாணயங்களை தேடிக் கண்டடைந்து, நாணவியல் கழகத்தை உருவாக்கியவர் என பல்வேறு பணிகளை தலைமையுரையில் கோடிட்டுக்காட்டினார்.
நாணயவியல் கழகம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்தவும், நாணயவியல் மாநாடு நடத்திடவும் திட்டமிட்டிருப்பதாக இயக்குநர் தன்வுரையில் எடுத்துரைத்தார்.
சென்னை, தினமலர் தலைமைச் செய்தியாளர் (பணி நிறைவு), திரு. இர. நூருல்லா அவர்கள் தனது புகழுரையில், முதலாளி, தொழிலாளி எனப் பாகுபாடில்லாமல் அனைவரிடமும் தாயாகவும் தந்தையாகவும், உற்ற சகோதரராகவும் நட்புறவுக்கொண்டு பழகக்கூடிய இனியவர், மனிதநேயமிக்க மாண்பாளர், எதையும் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் அணுகக்கூடியவர், ஆய்வுக்கு துணைமைச் சான்றுகளைவிட மூலச்சான்றுகளே மிக முக்கியம் என்பதை உணர்ந்தவர். ஒவ்வொரு நாணயத்தையும் தேடிச் சேகரித்த கள ஆய்வாளர் நல்ல பண்பாடுமிக்கவர் எனக்கூறினர்.
தமிழர்களின் வரலாற்றுக் காலத்தை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு முன், கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பின் என்றுதான் கொள்ளவேண்டும். 36 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் அவர்கள் இதே மார்ச் 15இல் நாணயங்களை ஆய்வு செய்து தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் என்றவர் அதே மார்ச் 15இல் ஆசிரியருக்கு நினைவேந்தல் கூட்டம் என நாள் ஒற்றுமையை சுட்டிக்காட்டி இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் மேனாள் கண்காணிப்பாளர் முனைவர் தி. சத்தியமூர்த்தி அவர்கள் ஆசிரியருடனான நினைவுகளை, நினைவுரையில் பகிர்ந்துகொண்டார்.
பொதிகை தொலைக்காட்சி மேனாள் இயக்குநரும் தமிழ்நாடு அரசின் கம்பன் விருதாளருமான முனைவர் பால ரமணி அவர்கள் ஆசிரியர் நினைவுகளை நந்தவனத்தில் பூத்த மலர்களாகக் கவிதாஞ்சலியாக்கினார்.
இந்நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேராசிரியர் தாயம்மாள் அறவாணன், கலைமாமணி நாகை முகுந்தன், பேராசிரியர் இராசகோபாலன், கவிஞர் கலியப்பெருமாள், பாவேந்தரின் பெயரன் திரு.கோ.செல்வம் மற்றும் பல அறிஞர்பெருமக்கள் ஆசிரியரின் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிகழ்வுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்வில் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

படச்செய்தி
தினமலர் மேனாள் ஆசிரியர், நாணயவியல் ஆய்வின் முன்னோடி முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் (15.03.2021) உலகத் தமிழாய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நினைவுரையாற்றினார். உடன், வேல்ஸ் கல்வியியல் கழக உதவிப்பேராசிரியர் முனைவர் பன்னிருகைவடிவேலன், மேனாள் பொதிகை தொலைக்காட்சி இயக்குநர் முனைவர் பால ரமணி, கலைமாமணி நாகை முகுந்தன், இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் மேனாள் கண்காணிப்பாளர் முனைவர் தி. சத்தியமூர்த்தி, நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், உதவிப்பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா, சென்னை, தினமலர் தலைமைச் செய்தியாளர் (பணி நிறைவு), திரு. இர. நூருல்லா ஆகியோர்.