முத்தமிழறிஞர் கலைஞரின் 99ஆவது பிறந்தநாள் ‘முத்தமிழறிஞர் கலைஞர் – நினைவுகள்’ சிறப்புப் பொழிவு

நிகழ்வு நாள் : 03.06.2022

முத்தமிழறிஞர் கலைஞரின் 99ஆவது பிறந்தநாள்
‘முத்தமிழறிஞர் கலைஞர் – நினைவுகள்’ சிறப்புப் பொழிவு
சென்னை, தரமணி, உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தில் இன்று (03.06.2022) வெள்ளிக்கிழமை முத்தமிழறிஞர் கலைஞரின் 99ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முற்பகல் 11 மணிக்கு நிறுவன வளாகத்தில் முத்தமிழறிஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் 4 மணிக்குச் சிறப்புப் பொழிவு நடத்தப்பட்டது. இதில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் தலைமையுரையாற்றினார் அவர் தம் உரையில்...
“தமிழ் முழுவதும் அறிந்த தன்னிகரற்ற தலைவராக முத்தமிழறிஞர் கலைஞர் விளங்கினார் .தமிழ் வாழ்வின் அனைத்து பணிநிலைகளையும் தன் படைப்பில் காட்டிய திறமை அவருக்கே உரியது புதினம், சிறுகதை, கவிதை, நெடுங்கதை, சங்க இலக்கிய உரை ஓவியங்கள், மடல்கள், அரசியல் கட்டுரைகள் என அனைத்துத் துறைகளிலும் தமிழினத்தின் உயர்வையே அவர் எடுத்துக்காட்டினார் என்றும்.
பல்வேறு அரசியல் களங்களில் அவர் ஓய்வில்லாது போராடி வென்றாலும் அனைத்து எழுத்துக்களிலும் தமிழ் வெல்க! என்னும் குரலே ஆர்ப்பரித்து கடல் அலைகளாய் அமைந்தன எனக் கூறினார். மேலும்,
மேடையில் பேசுவது போலவே எழுத்திலும் சமுதாயத்தை மாற்றமுடியும் என்று தூண்டியவர் நமது கலைஞராவார் என்றார்.
ஆய்வாளர் ,முனைவர் கோவிந்தசாமி அவர்கள் வகைப்படுத்திய பட்டியலை நினைவு கூர்ந்தார்:
சமூகப்புதினங்கள், வரலாற்றுப்பு தினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், திரைப்படங்கள், திரையிசைப் பாடல்கள், கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், காவியம், உரை, உரைவிளக்கங்கள், பொது, வரலாறு / நினைவுப் பதிவுகள், தன் வரலாறு / வாழ்க்கை வரலாறு, கடிதங்கள், கட்டுரைகள், கலை, இலக்கியம், பண்பாட்டுப் பொழிவுகள், கருத்தரங்கம் / மாநாட்டுப் பொழிவுகள், பட்டமளிப்பு விழாப் பொழிவுகள், வானொலிப் பொழிவுகள், தொலைக்காட்சிப் பொழிவு, சட்டமன்றப் பொழிவுகள், அரசியல் பொழிவுகள், நேர்காணல்/கேள்வி-பதில், பயண இலக்கியம், சிந்தனைத் துளிகள்
என்றவாறு வகைப்படுத்தி நோக்கலாம் எனக் கூறினார்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு அவர்கள் ‘முத்தமிழறிஞர் கலைஞர் - நினைவுகள்’ எனும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார், அவர்தம் உரையில்...
“முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அருந்தமிழ் ஆற்றலையும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும் அவர்தம் திரைப்படப் படைப்புகள் வாயிலாக மக்களிடையே கொண்டு சென்ற பாங்கையும், முதல்வராக இருந்த காலத்தில் பலருக்கும், பல தமிழ் அறிஞர்களுக்கும் நிதியுதவி அளித்தும், மறைந்த பல தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, அவர்தம் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய தமிழ்த் தொண்டினையும் எடுத்தியம்பினார். இளமைக் காலம் முதலே, சமுதாய ஏற்றத்தாழ்வினை நீக்கும் பணியிலேயே தம்மை ஓய்வில்லாமல் ஈடுபடுத்திக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் இன்றைய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் வீறுநடை போடுகிறார் எனவும் கூறினார்.”
முன்னதாக நிறுவனப் பேராசிரியர் முனைவர் பெ. செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அவர்கள் நன்றி நவின்றார். இந்நிகழ்வில் நிறுவனப் பேராசிரியர்கள், முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
மேலும், முத்தமிழறிஞர் 99ஆவது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் இன்று எழும்பூர், தமிழ் வளர்ச்சி வளாகத்தில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன – தமிழ்த்தாய் நூல் விற்பனை ஊர்தி மூலம் சிறப்பு தள்ளுபடி நூல் விற்பனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று நூல்களை வாங்கிப் பயனடைந்தனர்.