தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் திருக்குறள் ஓவியப் போட்டி (2021-22)

நிகழ்வு நாள் : 23.12.2022

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் திருக்குறள் ஓவியப் போட்டி (2021-22)
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு விழா
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தின் வாயிலாக 2021-22ஆம் ஆண்டுக்கான திருக்குறள் நெறிபோற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு விழா இன்று (23.12.2022) நடைபெற்றது.
இவ்விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூ.பொ.)
திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஓவியர் டராட்ஸ்கி மருது அவர்கள் தலைமையுரையாற்றி போட்டியில் வெற்றி பெற்ற 15 ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசாக ரூ. 40 ஆயிரம், பாராட்டு பட்டயம் மற்றும் பயனாடை வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில்,
தமிழர்களுடைய நெஞ்சங்களில் மட்டுமல்லாமல் பிற நாட்டினரின் நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் ஒரே உலகப் பொதுமறை திருக்குறளாகும். தமிழுக்கு கதி என்று கம்ப இராமாயணத்தையும் - திருக்குறளையும் சொல்லுவார்கள். 2053 ஆண்டுகளுக்கு முன்பு குறுகத் தரித்த குறளைப் படைத்த ஐயன் திருவள்ளுவரின் புகழ் வானளாவிய புகழாகும். திருக்குறளுக்காக உலகெங்கும் எத்தனை எத்தனை மாநாடுகள், கருத்தரங்குகள், உரை நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், திருக்குறள் தொடர்பான கதைகள், சிறுகதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் என்றார்.
மேலும், திருக்குறளைத் தந்த திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிட்டுத்தான் தமிழ்நாடு அரசுக் கடிதங்களும், அரசாணைகளும் வரையப்படுகிறது என்றும்.
தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தலைசிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பெருமைப்படுகிறது என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரிய முயற்சியால் குமரிக்கடலில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பெற்றதும் - சென்னை நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது என்பது மறக்க முடியாத வரலாறாகும் என்றும், தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக 1330 அருங்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவச் செல்வங்களுக்கு ரூபாய் 10,000 மதிப்புக்கொண்ட திருக்குறள் முற்றோதல் பரிசும் வழங்கப்பட்டுவருகிறது என்றார்.
ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்கள் தமது தலைமையுரையில் அரசு பள்ளி, கல்லூரிகளில் ஓவியத்தைப் பாடத்திட்டமாக கொண்டுவரவேண்டும் என்ற தனது விழைவைத் தெரிவித்தார்.
நிறுவன உதவிப் பேராசிரியரும் திருக்குறள் ஓவியக்காட்சிக்கூடப் பொறுப்பாளருமான முனைவர் து.ஜானகி அவர்கள் நன்றி நவின்றார். நிறுவன முதுகலை மாணவர் திரு. சு.உத்தமராஜன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், நிருவாக அலுவலர்கள், மாணவர்கள், ஓவியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.