தமிழ் செவ்வியல் இலக்கிய ஆடற்கலைக் கருவூலம் தொகுத்தல் திட்டப் பணிப்பட்டறைப் பயிற்சி

நிகழ்வு நாள் : 07.12.2018

உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் சார்பில் தமிழ் செவ்வியல் இலக்கிய ஆடற்கலைக் கருவூலம் தொகுத்தல் திட்டப் பணிப்பட்டறைப் பயிற்சி இன்று (07.12.2018) நடைபெற்றது. நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. தமிழ் வளர்ச்சித் துறை (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் துறைப் பேராசிரியர் முனைவர் பா.இராசா அவர்கள் பயிற்சிப் பட்டறையின் நோக்கம் குறித்து நோக்கவுரையாற்றினார். கிருட்டினகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை முனைவர் வ.தனலட்சுமி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவ்வுரையில், உலகளாவிய நிலையில் எழுத்துருக்களை உருவாக்கியதிலுள்ள சிக்கல்கள், தீர்வுகள் குறித்து விளக்கியதோடு இணையத்திலுள்ள நூல்களைத் தரவிறக்கம் செய்தல், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். சொல்லிலக்கண வகைப்பாட்டில் மயக்க நிலைகளைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கூறினார். அதோடு உலகளாவிய நிலையில் செவ்வியல் இலக்கியங்களுக்கான தரவுத்தளங்கள் எவைஎவை அவற்றில் ஆடற்கலைச் சொற்களை எவ்வாறு தேடுவது, எவ்வாறு பதிவிறக்கம் செய்வது போன்ற வழிமுறைகளைக் கூறினார். உலகளவில் மொழிபெயர்ப்புக்குள்ள வாய்ப்புகள் குறித்தும் இணையவழியில் மொழிபெயர்ப்பினை மேற்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விளக்கினார். இயற்கை மொழியாய்வு குறித்து விரிவாக விளக்கியதோடு பிற்பகலில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் உள்ள ஆடற்கலைத் தொடர்பான சொற்களை இணையதளத்தில் தேடுதல், பல தலைப்புகளாகப் பிரித்தல், வகைப்படுத்துதல் குறித்து செய்முறைப் பயிற்சி அளித்தார். பயிலரங்கில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் மடிக்கணினியில் இணையத்தைப் பயன்படுத்தி ஆடற்கலைச் சொற்களை வகைப்படுத்தி பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியில் நிறுவன முனைவர் பட்ட மாணவர்களான திரு.செ.துளசிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றிட, திருமதி செ.செண்பகவள்ளி அவர்கள் நன்றிவுரையாற்றிட, திரு.ச.ஆசைக்கண்ணு அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.