டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 27.02.2019

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு

இளமையிலே ஈகைக் குணம் கொண்டவர் சிவந்தி ஆதித்தனார்
- முனைவர் கோ.விசயராகவன் பேச்சு
மாண்புமிகு மேனாள் முதல்வர் அம்மா அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பல. அவற்றை ஆண்டுதோறும் நினைவுகூரும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அம்மா பிறந்த பிப்ரவரி மாதம் முழுவதும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாண்டும் 71 அரிய நூல்கள், 71 ஆய்வு நூல்கள் வெளியிடுதல், சிறப்புச் சொற்பொழிவுகள், பல அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்றுவருகின்றன. இச் சொற்பொழிவுகள் உடனுக்குடன் நூலாக்கம் செய்யப்பெற்று அன்றைய தினமே வெளியிடப்பெறுகின்றன.
27.02.2019 புதன்கிழமை முற்பகலில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் கல்வித்தொண்டு எனும் தலைப்பில் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றன. இந்நிறுவனப் பதிப்புத் துறைத்தலைவர் முனைவர் ஆ.தசரதன் வரவேற்றார். நிறுவன இயக்குநர் பேராசிரியர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் ஆற்றிய தலைமை உரையில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பன்முகத் திறமைகளை ஒவ்வொன்றாகக் கூறினார். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிறுவயது முதலே கொண்டிருந்த ஈகைக் குணங்களையும் விளையாட்டு ஈடுபாடுகளையும் தம் காலத்தில் கபடி விளையாட்டை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்த்த பெருமையையும் பாராட்டினார். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருச்செந்தூரில் தொடங்கிய சிவந்தி அகாடெமியில் அளித்துவந்த இந்திய அளவிலான பயிற்சித் தேர்வுகளுக்கு மாணவர்களை உருவாக்கியதைச் சிறப்பாக எடுத்துரைத்தார். அவர் உலக அளவில் விளையாட்டுத் துறையில் வகித்த பதவிகள், பல்கலைக்கழக அளவில் வகித்த பதவிகள், செய்த பொதுச்சேவைகள், அன்னாரிடமிருந்த சிறந்த குணநலன்கள், பத்திரிகைத் துறையில் முடிசூடிய மன்னராகத் திகழ்ந்தமை போன்றவற்றைப் பாராட்டினார். மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2006ல் ஆய்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒன்பது இலட்சம் செலவில் நூலக வாசிப்புக் கட்டடம் கட்டித்தந்த பெருமகனார் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்றார்.
சொற்பொழிவாற்றிய முனைவர் மா.இராமச்சந்திரன் அவர்கள் ஆதித்தனார் கல்லூரியில் படித்து, பட்டம் பெற்று, பணிசெய்து தமிழ்த் துறைத் தலைவராக விளங்கியதால் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரைப் பற்றி முழுமையாகத் தாமறிந்த அனைத்துச் செய்திகளையும் கூறினார். அன்னாருடைய இளமைப்பருவம், கல்லூரிப் பருவம், நெல்லை மாலைமுரசு முதல் சென்னைத் தினத்தந்தியில் அடிப்படைப் பணியிலிருந்து அனைத்துப் பணிகளையும் கற்றது, பின்தங்கிய பகுதியான திருச்செந்தூர் பகுதியில் ஆதித்தனார் கல்லூரியைத் தொடர்ந்து, மகளிர்க்கான கல்லூரி, பொறியியல் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி என ஏழு கல்வி நிறுவனங்களை உருவாக்கியதைப் பட்டியலிட்டார். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிற கல்வி நிலையங்கள் வளர்வதற்கும் கட்டடங்கள் கட்டுவதற்கும் சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தியதையும் சிறந்த ஆசிரியர்களை உருவாக்கி அவர்கள் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்கியதையும் பாராட்டிப் பேசினார். இறுதியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நற்குணங்களையும் உருக்கமாகப் பாராட்டினார். இக்கூட்டத்தில் திரளாக மாணவர்களும் கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.