தமிழ்த்தாய் 71 - தமிழாய்வுப் பெருவிழா நிறைவு விழா

நிகழ்வு நாள் : 01.03.2019

தமிழ்த்தாய் 71 - தமிழாய்வுப் பெருவிழா நிறைவு விழா

தமிழ்த்தாய் 71 - தமிழாய்வுப் பெருவிழா நிறைவு விழா (01.03.2019)
எனது தொகுதிமேம்பாட்டு நிதியை நிறுவனத்திற்கு நல்கியது தனது பாராட்டுக்காக அல்ல. அது தமிழுக்குச் செய்யும் கடமை – தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் நிறைவு விழா பேச்சு
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள்
தமிழ்த்தாய் 71 – தமிழாய்வுப் பெருவிழா ஒரு மாதத்தில் 100 அரிய நூல்கள், 100 ஆய்வு நூல்கள் வெளியிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாதனை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாண்புமிகு அம்மா அவர்களின் 65, 66, 67, 68, 69, 70, 71-ஆம் பிறந்த நாள் பிப்ரவரி திங்கள் முழுவதும் தமிழ்த்தாய் – தமிழாய்வுப் பெருவிழாவாகக் கொண்டாப்பட்டு வந்தன. ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு ஆய்வரங்குகள், சிறப்புச் சொற்பொழிவுகள், பயிலரங்கம், கவியரங்கம், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், இயல், இசை, நடன நிகழ்வுகள், அரியநூல்கள், ஆய்வு நூல்கள் வெளியீடு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு 01.02.2019 முதல் 01.03.2019 முடிய மாண்புமிகு அம்மா அவர்களின் 71-ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 52 அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் (ம) சிறப்புச் சொற்பொழிவுகள், 100 ஆய்வு நூல்கள் வெளியீடு, 100 அரிய நூல்கள் வெளியீடு, 71 கவிஞர்களின் கவியரங்கம், 71 குழந்தைகளின் திருக்குறள் முழக்கொலி, வள்ளுவம் கண்ட பரதம் இசைத்தட்டு வெளியீடு என அனைத்து நிகழ்வுகளும் தமிழாய்வையும் தமிழுணர்வையும் அதிகப்படுத்தின.
நிகழ்வின் தொடக்கமாக தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முழுக்கூடுதல் பொறுப்பு இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார். மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்கள் தமிழாய்வுப் பெருவிழாவைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்செயலர் திரு. வெங்கடேசன் விழாக் கருத்துரையாற்றினார். தமிழறிஞர்களும் தமிழக அரசு விருதாளர்களும் தமிழாய்வுப் பெருவிழாவின் நோக்கவுரையை நிகழ்த்தினார்கள்.
பேரறிஞர் அண்ணா பிரெஞ்சு கலைக்கழகத்தைப் போன்று தமிழ்நாட்டில் தமிழாய்வுக்கென, தமிழாராய்ச்சி மேம்பாட்டிற்கென ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று கனவு கண்டார். அவரின் கனவு நனவாகும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுச் செயல்பாடுகளை ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி திங்களில் நிகழும் தமிழாய்வுப் பெருவிழாவே சான்று என்றால் அது மிகையல்ல. பேரறிஞர் அண்ணா தமிழ்மேம்பாடு அறக்கட்டளைச் சொற்பொழிவைத் தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத் துணைத்தலைவர் முனைவர் இதயகீதம் இராமனுசம் அவர்கள் தமிழ்மொழிப்பற்றையும், தமிழினம், சமூகம், பொருளாதாரம், அரசியல் அனைத்திற்கும் வழிகாட்டியாக அண்ணாவின் மடல் இலக்கியங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
‘சங்க இலக்கியத்தில் சிற்றிலக்கியக் கூறுகள்’, ‘உலா இலக்கியங்களும் நடனமும்’, (சிற்றிலக்கியம்), ‘குறுந்தொகையில் பாடல் பொருள் நுட்பம், ஒருமொழி குறியீடு’, ‘சங்க இலக்கியத்தில் நகர உருவாக்கமும் வளர்ச்சி நிலைகளும்’, ‘சங்க இலக்கியத்தில் காந்தள்’, ‘சங்க இலக்கிய வாசிப்பில் தொல்காப்பியத்தின் பங்கு’, ‘ஔவையும் புலமையும்’, ‘அக இலக்கிய மாந்தர்களின் குறியீடு’, ‘(சங்க இலக்கியம்), ‘தொல்காப்பியமும் தமிழ் அகராதியில் மரபும்’, ‘தொல்காப்பியம் காட்டும் அறிவியல்’, ‘ தொல்காப்பியர் பிள்ளைத் தமிழ்’, ‘சொல்லிணக்க மரபு’, ‘தொல்காப்பிய அகராதிக் கூறுகள்’, ‘வினை வேர்கள் – அகராதி,’ (தொல்காப்பியம்), ‘திருக்குறளில் வைணவம்’, ‘திருக்குறள் கல்வெட்டுகள்’, (திருக்குறள்), ‘தமிழ் மருத்துவ மூலிகைகளின் பயன்பாடும் விற்பனை வாய்ப்புகளும்’, ‘மரபுவழித் தமிழ் மருத்துவம்’, ‘தருமபுரி மாவட்ட நாட்டுப்புற மருத்துவம்’, (மருத்துவம்), ‘வேதாத்திரி மகரிஷி கவிதைகள் – சமூகவியல் நோக்கு’, ‘நவீனப் புனைவுகளில் கிறித்தவம்’, ‘கவிஞர் மு.மேத்தாவின் படைப்புகளில் சமுதாயப் பார்வை’, ‘கவிஞர் நா. முத்துக்குமார் படைப்புகளில் மானுடம்’, ‘தமிழ்க்குடிமகன் படைப்புகளில் மானுடம்’, ‘கவிதையும் இயற்கையும்’, ‘(கவிதை), ‘திருமந்திரப் பிழிவு’, ‘திருமந்திரத்தில் வள்ளலார், அறிவியல், மருத்துவம், காலக்கணிதம், யோகம் தொடர்பான நூல்கள்’, ‘வ.உ.சி’, ‘மனிதருள் புரட்சித் தலைவர் புனிதர்’, ‘தந்தை பெரியாரும் சமூக நீதியும்’, ‘தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் பெரியார்’, ‘இந்திய அரசியலில் பெருந்தலைவர் காமராசரின் பங்கு’, ‘பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் கல்வித்தொண்டு’, (பொதுத் தலைவர்கள்), காமன் பண்டிகை வழிபாடும் சடங்குகளும்’, ‘காடரின் கதையும் அறமும்’, ‘மாசிக் களரித் திருவிழா; சடங்கு நாடகம் நிகழ்த்துதல்’, ‘இலக்கியங்கள் காட்டும் உளமொழியியல்’, ‘ ஆய்வை நோக்கிப் பயணித்தல்’, ‘இசுலாமியரின் அச்சுப்பண்பாடு’ ‘தலித் எழுத்துகள் குறித்த பதிவுகளும் பதிப்பு வரலாறும்’, கற்றல் கற்பித்தல், பயனுள்ள இணையதளங்கள், கணினித் தமிழ் வளர்ச்சி, தமிழரின் மெய்யியல், உலகத் தமிழர்களின் தொன்மம் எவை பல்வேறு வகைப்பாக்களுள் அடங்கிய பொருண்மைகளைப் பல்வேறு தரப்பட்ட தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வருகை புரிந்து சொற்பொழிவாற்றினார்கள். சொற்பொழிவாற்றியதோடு மட்டுமல்லாமல் அனைத்தும நூலாகவும் சொற்பொழிவு நாளன்றே வெளியிட்டு பெருமை சேர்த்தது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
குடியுரிமைப் பணித் தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே எழுதத் தீர்மானம் கொண்டு வந்தவர் காமராசர் என்பதைப் பதிவுசெய்த – பழ.நெடுமாறன், (தமிழ்த் தேசியத் தலைவர்) பெண்கள் படித்தால் சமுதாயமும் நாடும் உயரும் என்று சொன்னவர் புரட்சித் தலைவர் என்பதைச் சுட்டிக்காட்டி, ‘புரட்சித் தலைவர் ஓர் ஆவணம்’, எனும் பொருண்மையில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றி நிகழ்வைப் பெருமைப்படுத்தினார் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் நாவுக்கரசி திருமதி பா.வளர்மதி அவர்கள்.
100க்கும் மேற்பட்ட அரிய மற்றும் ஆய்வு நூல்களை மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராசன் மற்றும் சொல்லின் செல்வர் முனைவர் வைகைச் செல்வன் அவர்கள் வெளியிட்டு புரட்சித்தலைவி அம்மாவின் நற்குணங்களைப் பகிர்ந்து அவரது நினைவைப் போற்றினார்கள்.
ஒரு திங்கள் முழுவதும் நடந்த நிகழ்விற்கு தமிழ்த்தூதர் தனிநாயக அடிகளார் ஆய்வு மாணவர் விடுதி, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு நிதி அளித்தால் தமிழ் வளரும் ஆய்வு மேம்படும் என்பதை உணர்ந்த தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் முதுநிலை மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3½ கோடி நிதி நல்கியது தனது பாராட்டுக்காக அல்ல. அது தமிழுக்குச் செய்யும் கடமை என விழாவின் நிறைவுரையாகப் பேசியது அனைத்து தமிழ்நெஞ்சங்களும் மகிழ்ச்சியால் நிறைவுச் செய்தது. தான் இருக்கும்வரை தமிழுக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதியளித்து தமிழனாக உயர்ந்தார். நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி நிறுவனப் பேராசிரியர்கள் அனைவரும் அறக்கட்டளைகளுக்குப் பொறுப்பாளராக இருந்து பொழிவுகளுக்குக் காரணமாக இருந்தனர்.
இந்நிகழ்விற்கு நிறுவன பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள், தட்டச்சாளர்கள் அனைவரின் பங்கும் மகத்தானது. ஊர்கூடி தேரிழுக்கும் பணி நிறைவடைந்து தமிழாய்வுப் பணி என்பது இத்தோடு முடிவதல்ல தொடக்கமே என்பதை உணர்த்திச் சென்றிருக்கிறது இந்நிகழ்வு.
1. தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் முதுநிலை மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3½ கோடி நிதியை ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், தமிழறிஞர்கள் ஆளுயர மாலை அணிவித்து பாராட்டினர்.
2. நிறைவு நாளில் உலக நாடுகளில் தமிழரின் தொன்மை மற்றும் தமிழ் வினைவேர்கள் எனும் இரண்டு ஆய்வு நூலினையும் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள் வெளியிட ஒடிசா பாலு பெற்றுக்கொண்டார். உடன் வாணியம்பாடி மருத்துவர் அக்பர் கவுசர், மொழிபெயர்ப்பு இயக்குநர் முனைவர் ந. அருள், முனைவர் ப. சிவராஜி, முனைவர் து. ஜானகி, நூலகர் பெருமாள்சாமி உள்ளனர்.