தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் எனும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் 2019 மார்ச்சு 20

நிகழ்வு நாள் : 20.03.2019

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் எனும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் 2019 மார்ச்சு 20
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இசைகளுக்கெல்லாம் தாய் தமிழிசையே!
பேரா. முனைவர் அமுதா பாண்டியன் பேச்சு!
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் எனும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் 2019 மார்ச்சு 20 அன்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் கருத்தரங்க நூலினை வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். அவர் பேசுகையில், தமிழ் மொழி போலவே தமிழிசையும் உலகின் மூத்த இசையாக உள்ளது என்றார்! நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேரா.முனைவர் அமுதா பாண்டியன் அவர்கள் தொடக்கவிழா பேருரையினை நிகழ்த்தினார். சாதியப் பின்னடைவுகளாலும் பொருளாதாரப் பின்னடைவுகளாலும் இந்தியாவிலிருந்த பாணர்கள் தங்கள் இசையுடன் உலகின் பல பாகங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். 2500 வருடப் பழைய யாழ், மெசபத்தோமியா கல்லறையில் கண்டெடுக்கப்பட்டது. தென்கிழக்காசியா இசைக்களுக்கான இலக்கணம் ஏறத்தாழ ஒன்றாகத்தான் உள்ளது. இவற்றிற்கெல்லம் தாய்இசை தமிழிசையே என்று கூறினார்! பேராசிரியர் இறையரசன் பேசுகையில் இராசராச சோழன் வென்ற கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் தமிழரின் இசை, சிற்பங்கள் , ஓவியங்கள் காணப்படுகின்றன. கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்ணகி, மணிமேகலை வழிபாடு காணப்படுகின்றது. தாய்லாந்தின் அரசு விழாக்களில் தேவாரம் பண்ணிசை ஓதப்படுகின்றது என்று கூறினார்!
செல்வி செவ்வந்தி கண்ணன் அவர்கள் பேசுகையில், மியான்மாரில் சுமார் எட்டு இலட்சம் தமிழர்கள் இருக்கின்றார்கள் தமிழிசை அங்குக் கோவில்களின் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தமிழிசை என்றாலே சினிமா இசையைத்தான் கேட்டு வருகிறோம். தமிழிசை எங்கள் மக்களுக்கு இன்னும் அவ்வளவாக அறிமுகம் இல்லை. தமிழ்நாட்டில் வாழும் மக்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஏனென்றால் உங்களுக்குத் தமிழ் மொழியும் தமிழ் இசையும் தாராளமாகக் கிடைத்துவிடுகின்றன. ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. மியான்மாரில் தமிழிசையினை வளர்த்தெடுக்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழிசை அறிஞர்களும் உதவ வேண்டும் என்று கூறினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியருமான முனைவர் கு. சிதம்பரம், அவர்கள் கூறுகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலத்திற்கேற்பவும் அந்நில வாழ்வியல் சூழலுக்கேற்பவும் பண் அமைத்து இன்பம் கண்டவன் தமிழன்! ஆனால் தமிழிசை பல்வேறு காலக்கட்டங்களில் தமிழ் மொழி எவ்வாறு பிற மொழிகளின் தாக்கத்திற்கு ஆட்பட்டதோ அதேபோலத் தமிழிசையும் பிறமொழிகளின் தாக்கத்திற்கு ஆட்பட்டுள்ளது. இந்நிலையிலிருந்து தமிழிசையினை மீட்டுருவாக்கம் செய்யவும் தமிழிசையின் மேன்மையினை உலகெங்கும் பரப்பவும் வழிவகை செய்யப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிலப்பதிகார வர்ணம், தேவார இசைப் பாடல், தமிழிசை நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை தமிழிசைச் சங்கத்தின் மாணவர்கள் நிகழத்தினர். சிறந்த கட்டுரையாளர்களுக்கு ஆபிரகாம் பண்டிதரின் நூற்றாண்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேரா. முனைவர் செ.கற்பகம், தமிழிசைச் சங்கம், தமிழிசைக் கல்லுரியின் முதல்வர் முனைவர் வே. வெ. மீனாட்சி, அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் இசைத் துறைப் பேரா. முனைவர் வே. சுதர்சன், கானல்வரி கலை இலக்கிய இயக்கத்தின் செயலர் இரத்தின புகழேந்தி, தமிழ்நாடு அரசு தமிழிசைக் கல்லூரியின் பேரா. சு. மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.