புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சமூகவியல் (ம) கலை மேம்பாட்டு ஆய்விருக்கை

நிகழ்வு நாள் : 19.02.2020

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக வேந்தர் ஏ.சி.எஸ் அறிவிப்பு

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் 19ஆம் நாள் (19.02.2020) நிகழ்வாக, முற்பகல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சமூகவியல் (ம) கலை மேம்பாட்டு ஆய்விருக்கை சார்பில் “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சமூகத் தொண்டு”, “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கலை, சமூகவியல் பங்களிப்பு - தேசியக் கருத்தரங்க ஆய்வுக்கோவை” எனும் தலைப்பில் அமைந்த நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் தலைமையுரையாற்றிட, நிறுவன புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சமூகவியல் (ம) கலை மேம்பாட்டு ஆய்விருக்கைப் பொறுப்பாளர் பேரா. ம.செ.இரபிசிங் அவர்கள் வரவேற்புரையாற்றினார். டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக நிறுவனம் – வேந்தர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் நூல்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார் அவர்தம் உரையில் “"தமிழ்நாட்டில் இருக்கிற தாய்மார்களின் அன்புக்குரியவராக எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். கலை, சமூகம், அரசியல் என்ற மூன்று தளங்களிலும் மக்கள் பணியாற்றிய மகத்தான தலைவர் எம்.ஜி.ஆர்.
சம காலத்தில் அவரோடு பழகி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அனுபவம் எனக்கு உண்டு. மற்றவர்க்கு உதவுகிற மனப்பான்மையை அவரிடமிருந்து தான் நான் பெற்றேன். எல்லா மக்களுக்கும் தன்னாலான உதவியைச் செய்து ஈகைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் புகழ்பரப்ப உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சமூகவியல் மற்றும் கலை மேம்பாட்டு ஆய்விருக்கை, கலைப் பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றி வருவது கண்டு உள்ளம் மகிழ்கிறேன். ஏழை விவசாயிகளின் பாதங்கள் கூடப் புண்படக் கூடாது என்று அவர்களுக்குக் காலணி வழங்கியவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவரை மனிதராக மட்டுமே கருதி விடாமல் அவரைத் தெய்வமாகக் கருதி எங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிறேன். உலக நாடுகள் எங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தமிழ்மொழி தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் தமிழை கற்றுக் கொடுப்பதற்காக முனைவர் பட்டம் படித்த மாணவர்களை, வெளிநாடுகளில் பணிக்கு அமர்த்தித் தமிழ் பயிற்றுவிக்கும் பொறுப்பை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் முன்னெடுத்துச் செய்யும். மொரீசியசிலும் இலங்கையிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வெண்கலச் சிலைகள் நிறுவுவதற்கு நான் ஏற்பாடு செய்துள்ளேன். உலகின் எந்தப் பகுதியில் புரட்சித் தலைவருக்குச் சிலை வைத்தாலும் அந்தச் சிலை நிறுவுவதற்குச் செலவாகும் தொகையில் என்னுடைய நிதியும் இருக்கும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அருங்காட்சியகம் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நிறுவப்படும் என்பதை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உண்மைத் தொண்டனாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.
பொது (ம) குடும்ப நல மருத்துவர் கலைமாமணி மருத்துவர் ச.அமுதகுமார் அவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சமூகவியல் (ம) கலை மேம்பாட்டு ஆய்விருக்கை ஆய்வு உதவியாளர் முனைவர் ஈ.விஜய் நன்றி நவின்றார்.
தொடர்ந்து, திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் அறக்கட்டளைப் பொறுப்பாளர் உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி அவர்கள் வரவேற்புரையாற்றிட, திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜேஸ்வரி அவர்களின் “தமிழண்ணலின் வாழ்வும் அவர்தம் ஒப்பிலக்கியப் பணியும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு நடைபெற்றது. டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக நிறுவனம் – வேந்தர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் நூலினை வெளியிட, பொது (ம) குடும்ப நல மருத்துவர் கலைமாமணி மருத்துவர் ச.அமுதகுமார் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.