மறைமலை அடிகளார் அறக்கட்டளை, ஔவை துரைசாமி அறக்கட்டளை, பெருந்தலைவர் காமராசர் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 25.02.2020

தமிழ்த்தாய் 72, தமிழாய்வுப் பெருவிழா 25.02.2020 – செவ்வாய் நிகழ்வில் முற்பகல் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பொறுப்பாளராக உள்ள மறைமலை அடிகளார் அறக்கட்டளையில் மாநிலக் கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் அவர்களின் “தனித்தமிழ்: மாட்சியும் நீட்சியும்” என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றது. நண்பகல் பேரறிஞர் ஔவை துரைசாமி அறக்கட்டளையின் சார்பில் செம்மொழி தமிழாய்வு மற்றும் நிறுவன நூலகர் (ஓய்வு) பேரா. கு. சிவமணி அவர்கள் “ஔவையும் புலமையும்” என்ற தலைப்பில் பேசுகையில் சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிய ஔவை துரைசாமி பிள்ளை அவர்கள், டாக்டர் உ.வே.சாமிநாதையார் பதிப்பித்த நூல்களுக்கு மேலும் சிறப்புச் செய்யும் வகையில், பல்வேறு வரலாற்றுக் கல்வெட்டுச் சான்றுகளுடன், ஆங்கில நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டி, “உரை வேந்தர்” என்ற பட்டத்தினை பெற்றார் என்று எடுத்துரைத்தார். சங்க இலக்கியத்திற்கு அவர் எழுதிய உரை நூல்களைப் பயின்று, அமெரிக்காவிலுள்ள பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், ஆங்கிலத்தில் தாம் மொழிப்பெயர்த்த “புறநானூறு” நூலுக்கு, ஔவை துரைசாமி எழுதிய புறநானூற்று உரை நூலே மூல ஆதாரமாக அமைந்துள்ளது என்பதையும், அமெரிக்கா பல்கலைக்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர் பணிபுரிந்த திருமதி இராஜம், திருமதி வைதேகி ஹெர்பர்ட் முதலியோர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த சங்க இலக்கிய நூல்களுக்கும் உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் உரை நூல்களே வழிகாட்டிய இருந்தாகக் குறிப்பிட்டுள்ளதனையும் சுட்டிக்காட்டி, அறிஞர் ஔவை துரைசாமி பிள்ளையின் புலமைத் திறத்திற்குப் புகழாரம் சூட்டினார். மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஔவை துரைசாமி பிள்ளையின் உரை நூல்கள் அனைத்தையும் செம்பதிப்பாக வெளியிட வேண்டும் என்றும் பேராசிரியர் கு.சிவமணி கேட்டுக்கொண்டார்.
பிற்பகல் பெருந்தலைவர் காமராசர் அறக்கட்டளையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறைதலைவர் பேரா.முனைவர் இரா.காமராசு அவர்களின் “பண்பாட்டு எழுத்து: தமிழ் நாவல்கள்” என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெறவுள்ளன. இதில் முனைவர் பட்ட ஆய்வாளர் அவர்கள் ந.கோமதி நன்றியுரை ஆற்றினர்.